மான்ஸ்டர் – விமர்சனம்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா,பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘மான்ஸ்டர்’.
மின் வாரியத்தில் பணி புரியும் எஞ்சினியராக வருகிறார் எஸ்.ஜே சூர்யா. ஒரு சிறு பூச்சியை கூட கொல்ல நினைக்காத உள்ளம் தான் எஸ் ஜே சூர்யாவுக்கு, திருமணம் செய்ய ஒரு பெண் கிடைக்காமல் அலைகிறார். சென்னையில் ஒரு கட்டிடத்தில் தனக்கென்று ஒரு ப்ளாட் வாங்கி குடியேறுகிறார். அந்த வீட்டில் குடியேறிய ராசி, ப்ரியா பவானிசங்கரின் நட்பு கிடைக்கிறது.
இப்படியாக எஸ் ஜே சூர்யாவின் வாழ்க்கை சென்று கொண்டிருக்க, அவர் தங்கியிருக்கும் ப்ளாட்டில் ஒரு எலி புகுந்து தனது அட்டகாச ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. வீட்டில் இருக்கும் அனைத்தையும் துவம்சம் செய்கிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் நாயகன், அந்த எலியை பிடிக்க படும் பாடுதான் இந்த ‘மான்ஸ்டர்’. இதற்கிடையில்,வைரக் கடத்தல் கும்பலும் அந்த எலியை தேடுகிறது. அதற்க்கான காரணத்திற்கும் இப்படத்தில் பதில் இருக்கிறது.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா படத்தின் கதைக்கு பொருத்தமான தேர்வு தான், எலியோடு அவர் படும் இன்னல்களை தனது கண் பார்வையில் அசர வைக்கிறார். ப்ரியா பவானிசங்கர் அழகு தேவதையாக வந்து செல்கிறார். ரசிகர்களை தன் காந்த பார்வையில் கட்டி போடுகிறார்.
இப்படத்தின் மெயின் ஹீரோ என்று சொல்ல வேண்டும் என்றால் அது அந்த ‘எலி’ தான். படத்தின் ஒட்டு மொத்த காட்சியையும் தூக்கிச் செல்வது இந்த எலி தான். இதை படமாக்க ஒரு இயக்குனராக நெல்சனின் முயற்சி நன்றாகவே வெற்றியடைந்திருக்கிறது.கருணாகரனின் காமெடி ஆங்காங்கே கலகலப்பூட்டுகின்றன. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னனி இசை இப்படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் என்று கூறினால், அது ஒளிப்பதிவு தான். கோகுல் பினாயின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் தத்ரூபமாக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஒரு எலியை இதுவரை யாரும் இப்படி ஒரு கோணத்தில் எடுத்திருக்கவில்லை, எடுக்கப்போவதும் இல்லை. ஒரு இடத்தில் கூட  கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல், உண்மையான எலியைக் வைத்து படமெடுத்த இயக்குனரின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி,குடும்பத்தோடு பார்க்க வேண்டிய பொழுதுபோக்கு திரைப்படம்.

Leave a Response