மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில்,சிவகார்த்திகேயன், நயன்தாரா,யோகிபாபு,தம்பி ராமைய்யா,சதீஷ்,ரோபோ சங்கர், ராதிகா இவர்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.

கார் கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவர் சிவகார்த்திகேயன். டிவி சீரியல் தயாரிக்கும் கோடீஸ்வரி நயன்தாரா. இருவருக்கும் எதிர்பாராதவிதமாக முட்டல் மோதல் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து நயன்தாராவின் மீது காதலில் விழுகிறார் சிவகார்த்திகேயன். ஆனால் நயன்தாராவோ அவரை உதாசீனப்படுத்துகிறார்.

சில பல நிகழ்வுகளுக்கு பிறகு ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் வீடுதேடி வந்து காதலை சொல்லி வெளிநாட்டில் இருக்கும் தனது உறவினர்களிடம் திருமணத்திற்கு அனுமதி வாங்க அழைத்து செல்கிறார் நயன்தாரா.

அதன்பின் நடந்தது என்ன..? திடீரென சிவகார்த்திகேயன் வீடு தேடி வந்து காதல் சொல்லும் அளவுக்கு நயன்தாராவிடம் என்ன மாற்றம் நடந்தது..? வெளிநாட்டிற்கு சிவகார்த்திகேயனை அழைத்துச் சென்றபோது அங்கே என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

சிவகார்த்திகேயன் வழக்கம்போல தனது துருதுரு நடிப்பில் எந்தவித குறையும் இல்லாமல் பங்களிப்பு செய்திருக்கிறார். அதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் விழலுக்கு நீர் இறைத்துக் கதையாக சுவாரசியமே இல்லாத கதையும் திரைக்கதையும் அவரது உழைப்பை வீணடித்துவிட்டன.

நயன்தாராவும் ஜஸ்ட் லைக் தட் இந்த கேரக்டரை தூக்கி சாப்பிடுகிறார். அதேசமயம் நயன்தாரா சிவகார்த்திகேயன் ஜோடியை பார்க்கும்போது நயன்தாராவின் சீனியாரிட்டி நம் மனதில் வந்து வந்து ஒரு சிறிய உறுத்தலை படம் நெடுக கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

ராதிகா செண்டிமெண்டான கேரக்டரில் நடித்துள்ளார்,ஒரு பெரிய காமெடி பட்டாளத்தை வைத்துக்கொண்டு காமெடி காட்சிகளை வைக்க தவறிவிட்டார் இயக்குனர்,தேவையில்லாமல் வெளிநாட்டு காட்சிகளை திணித்துள்ளனர்.

காட்சிக்குக் காட்சி சுவாரசியம் காட்டியிருக்க வேண்டிய திரைக்கதையை இயக்குனர் ராஜேஷ் மெத்தனமாக கையாண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. சிவகார்த்திகேயனுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கும், இனிவரும் படங்களில் கதைகளை தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Leave a Response