வாக்கு இயந்திரங்களில் முறைகேடா ? முன்னாள் ஜனாதிபதி வருத்தம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பிகார், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டு தனியார் வாகனங்களில் எடுத்துச்செல்லப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளன.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,வாக்காளர்களின் தீர்ப்பை மாற்ற முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வருத்தமளிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு முழுக்க முழுக்க ஆணையத்தின் பொறுப்பாகும்.

நமது ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய எவ்வித யூகங்களுக்கும் இடமிருக்கக்கூடாது. மக்களின் தீர்ப்பு புனிதமானது. அத்தீர்ப்பில் சிறிதளவும் சந்தேகத்திற்கு இடமிருக்கக்கூடாது. நமது அரசு நிறுவனங்கள் மீது எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு.

அரசு நிறுவனங்களின் கருவிகள் எவ்வாறு செயல்படுவது என்பதை அதிகாரிகளே தீர்மானிக்கின்றனர் என்பது எனது கருத்து. இவ்விவகாரத்தில் அரசு நிறுவனங்களின் நேர்மையை உறுதிசெய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. ஆணையம் அவ்வாறு செய்து அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

என்.டி.டிவி ஊடகத்தின் இயக்குநர் சோனியா சிங்கின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், அரசு நிறுவனங்கள் சரியாகவே செயல்படுகின்றன. இந்நிறுவனங்கள் பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டன.

தவறான அதிகாரிகள் மட்டுமே இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவர் என நான் நம்புகிறேன். ஒரு நல்ல அதிகாரி தனது கருவிகளை முறையே பயன்படுத்துவார் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு தொடர்பான வீடியோக்கள் வைரலாகிய பின் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Response