“83” படத்தில் இணைந்த கமலஹாசன்

கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இவ்வாண்டின் வெகு முக்கிய படைப்பான “83” படத்தின் தமிழ் பதிப்பை வழங்குகிறார்கள்.

இந்திய சினிமாவில் சரித்திரம் படைத்த பன்முகத்தன்மை கொண்ட நாயகனாக விளங்ககூடியவர் கமலஹாசன். அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் மற்றும் வழங்கும் படங்கள், எப்போதும் தரமும் தனித்தன்மை ஒருங்கே கொண்டதாக இருக்கும்.

அந்த வகையில் “83” படத்தை தமிழில் வழங்குவது குறித்து திரு. கமலஹாசன் கூறியதாவது,

83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன். அது மட்டும் அல்லாமல் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற சீரிய கருத்தை இந்த தேசத்து மக்களின் மனதில் விதைத்த வகையில் இந்த அணிக்கு சிறப்பு மரியாதை உண்டு. முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் இந்த வெற்றியே சான்று. தன்னம்பிக்கையும், மனத்திடமும், இந்த வெற்றிக்கு ஊக்க மருந்து. பல்வேறு மக்களுக்கு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த கதையை, கபில்தேவ் தலைமையில் மொத்த அணியும் போராடி, உலககோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி.

தொடர்ந்து கதை அம்சமுள்ள , மற்றும் வெகு ஜன ரசனைக்கேற்ப படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தியில் தயாரித்து வரும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் இந்தப் படத்தை விநியோகம் செய்ய உள்ளார்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் கூறியதாவது,

“83” படத்தின் தமிழ்பதிப்பை உலகநாயகன் கமல்ஹாசன் வழங்குவது எங்கள் அனைவருக்கும் மிகப்பெரும் பெருமை. “83” படம் கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடும் ஒரு படம். கிரிக்கெட் சாதாரணமான விளையாட்டல்ல. அது இந்திய மக்கள் அனைவரும் பேதமின்றி பூஜிக்கும் மதம் ஆகும். இந்தியாவிற்கு உலககோப்பையை கொண்டு வந்த வீரர்களை திரையில் மீட்டுருவாக்கம் செய்வது மிகப்பெரும் பெருமை. அந்த வீரர்கள் இப்படத்தின் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்திருப்பது எங்கள் அனைவருக்கும் பெருமை. இப்படி ஒரு படத்தை தமிழில் இணைந்து விநியோகிப்பதில் எங்கள் நிறுவனம் இணைந்திருப்பது மிகப்பெரும் கௌரவம் என்றார்.

இயக்குநர் கபீர்கான் கூறியதாவது,

திரு கமல்ஹாசன் அவர்களையும் திரு சசிகாந்த் அவர்களையும் பெரும் மகிழ்ச்சியுடன் எங்கள் அணிக்கு வரவேற்கிறேன். இருவரும் எங்கள் படத்தின் பதிப்பை இணைந்து வழங்குவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம் ஆகும். மிகப்பெரும் நிறுவனங்கள் இணைந்திருப்பதால் தமிழில் இப்படம் மிகப்பெரிய வெளியீட்டை காணும் என நம்பிக்கை கொள்கிறேன்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கேப்டன் கபில்தேவ்வாக நடிக்கிறார். இவருடன் தாஹிர் ராஜ் பாஷின், ஜீவா, சாஹிப் சலீம், ஜதீன் சர்னா, சிராக் படேல், டிங்கர் சர்மா, நிஷாந்த் தாஹியா, ஹார்டி ஷந்து, ஷஹில் கத்தார், அம்மி விர்க், ஆதிநாத் கொதாரே, தாய்ர்யா கர்வா, R பத்ரி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் அணி வீரர்களாக நடித்துள்ளார்கள். தீபிகா படுகோன் கபில்தேவ் மனைவி ரோமி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவன நிர்வாக அதிகாரி ஷிபாஷிஷ் சர்கார் கூறியதாவது,

உலகநாயகன் திரு கமல்ஹாசன் இப்படத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தியது எங்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் ஒய் நாட் ஸ்டுடியோஸ்நிறுவனமும் “83” படத்தை தமிழில் தரமான, மிகப்பெரும் வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என்றார்.

இத்திரைப்படம் 2020 ஏப்ரல் 10 உலகம் முழுதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

Leave a Response