இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக செளரவ் கங்குலி பதவி ஏற்பு

இந்திய கிரிக்கேட் வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது . ஏற்கனவே போட்டியின்றி கங்குலி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 23ம் தேதி நடக்கும் பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முறைப்படி கங்குலி பதவியேற்பார் எனவும் கூறப்பட்டது. அதன்படி, பிசிசிஐ தலைவராக சவுரத் கங்குலி மற்றும் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இருவரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண்மால் பிசிசிஐ பொருளாளராகவும் பதவியேற்றார். கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் இணைச்செயலாளராகவும், மஹிம் வர்மா துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி லோதா அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பிசிசிஐயில் உள்ள குறைகளைக் களைவதற்காக வினோத் ராய் தலைமையில் நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த நிர்வாகக் குழுவின் மாதங்கள் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அக்டோபர் 23ஆம் தேதியான இன்றைய தேதிக்குள், பிசிசிஐ அமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சிஓஏ தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்வு கடந்த சில நாட்களாகத் தீவிரமாக நடந்தது. இதில் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவிக்காக, வேட்புமனுத் தாக்கல் செய்தார். கங்குலியைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்பதால் அக்டோபர் 14ஆம் தேதி பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கங்குலி.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, பிசிசிஐ ஊழல் இல்லாத ஓர் அமைப்பாகவும், நம்பகத்தன்மையில் எந்த சமரசம் இன்றியும் செயல்படும் என தெரிவித்தார்.

Leave a Response