அருண் விஜய் நடிக்கும் கிரைம் திரில்லர் படம் பூஜையுடன் துவக்கம்

அருண் விஜய், இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலன் இணையும் க்ரைம் திரில்லர் படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.இப்படம் அருண் விஜய்யின் 30 வது படம்.

“ஹரிதாஸ்“ திரைப்படம் மூலம் அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் தனது திறமையை வெளிக்கொணரும் அடுத்த படைப்பில், தமிழ் சினிமாவின் வெற்றி நாயகரான அருண் விஜய்யுடன் க்ரைம் திரில்லர் படத்தில் களமிறங்குகிறார். அருண் விஜய் இப்படத்தில் தன் வெற்றியின் உற்சாக அடையாளமான குற்றம் 23 படத்தின் காக்கி உடையை மீண்டும் இப்படத்தில் அணிய உள்ளார். படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இயக்குநர் நரேன் மற்றும் இயக்குநர் அறிவழகன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

படம் பற்றி இயக்குநர் குமரவேலன் கூறியபோது,

இப்படம் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர். இந்த வகை படங்கள் தமிழுக்கு புதிதல்ல ஆனால் இதுவரை வந்த படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இதுவரை யாரும் பார்த்திராத பாணியில் இப்படம் புதிதாக இருக்கும். நடப்பு சூழலில் உள்ள சமூக அவலத்தின் ஒரு பகுதியை மையமாக கொண்டு தீவிரமாக அலசும் ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்றார். மேலும் இப்படத்தில் அருண் விஜய் இணைந்தது பற்றி அவர் கூறியபோது,

சினிமாவை உயிராய் நேசிக்கும் ஒருவர், அவர் ஏன் இப்படத்தில் இருக்கக் கூடாது என நினைத்தேன். மேலும் அவர் ஏற்கனவே குற்றம் 23 படத்தில் காக்கி சட்டையில் தன்னை கச்சிதமாக பொருத்தி நிரூபித்தவர். இப்படம் அவரது குற்றம் 23 போலீஸ் கதாப்பாத்திரத்தில் இருந்து மாறுபட்ட பாத்திரம். இரண்டு கதைகளின் களங்களும் முற்றிலும் வேறானது. அவரது பாத்திரம் மிகவும் புத்திக்கூர்மை வாய்ந்த, வலுவான ஒரு பாத்திரமாக இருக்கும். அத்துடன் மிகவும் உணரச்சி மிக்கதாகவும் இப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. இந்தக்கதையை முழுதாக முடித்த போதே அருண் விஜய் மனதில் வந்துவிட்டார். ரசிகர்கள் படத்தினைப் பார்க்கும் போது அவர் இப்பாத்திரத்திற்கு ஏற்றவர் என்பதை நிச்சயம் உணர்வார்கள். இப்படத்தில் நடிக்க மேலும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இப்படத்தினை மூவி சிலைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது .செப்டம்பர் மத்தியில் இப்படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. நெஞ்சமுண்டு நேர்மயுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தடம் படத்தில் அருண் விஜய்யுடன் பணிபுரிந்த கோபி ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைக்கிறார்.

சாஹோ படத்தின் மூலம் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ள அருண் விஜய் தனது அடுத்த படமான “மாஃபியா” படத்தை முடித்துவிட்டார். மேலும் அவர் நடிப்பில் “அக்னி சிறகுகள்”, “பாக்ஸர்” படங்கள் விரைவில் முடிக்கப்படும் நிலையில் உள்ளது.

Leave a Response