யோகிபாபு , கருணாகரன் இணைந்து நடிக்கும் காமெடி படம் “ட்ரிப்”

யோகி பாபு , கருணாகரன் இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நாயகர்கள். இருவரும் வேறு வேறு பாதையில் ரசிகர்களை தங்களது தனிப்பட்ட திறமைகள் மூலம் கவர்ந்து தங்களுக்கான தடத்தை பதித்தவர்கள். அந்த வகையில் தற்போது இருவரும் இணைந்து டார்க் காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் ‌ திரில்லர் படமான “ட்ரிப்” மூலம் ரசிகர்ளை மகிழ்விக்க வருகிறார்கள். “டார்லிங்” , “100” படங்களின் இயக்குநர் சாம் ஆண்டனின் இணை இயக்குநர் டென்னிஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இயக்குநர் டென்னிஸ் படத்தினை பற்றி கூறியது,

“ட்ரிப்” திரைப்படம் உல்லாச பயணத்தை அடிப்படையாக கொண்டது. இது ஒரு டார்க் காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன், திரில்லர். இரண்டு நண்பர்கள் திட்டமிட்ட ஒரு இடத்தை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். வழியில் அவர்கள் சந்திக்கும் இடர்கள், அப்பயணத்தை அட்வெஞ்சராக்குகிறது. இடையில் அவர்கள் வேறு ஒரு பயணத்தில் உள்ள 5 பசங்களையும் 4 பெண்களையும் சந்திக்கும் போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்படுகிறது. இதுவே இப்படத்தின் கதை.

கருணாகரனையும் யோகிபாபுவையும் படத்திற்கு தேர்வு செய்தது பற்றி இயக்குநர் கூறியபோது,

“100” படத்தில் வேலை பார்த்த போதே இப்படக்கதை பற்றி அறிந்துகொண்ட யோகிபாபு என்னை முழுக்கதையும் முடித்த பிறகு வந்து பார்க்கச் சொன்னார். படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து பயணிக்கும் இன்னொரு கேரக்டரை பற்றி சிந்திக்கும் போது எனக்கு கருணாகரன் மட்டுமே மனதில் வந்தார்.அவர் மட்டுமே இந்த பாத்திரத்தை செய்ய முடியும் எனத் தோன்றியது. மேலும் இருவரின் டைமிங் காமெடியும், நகைச்சுவையில் உள்ள தனித்திறமையும் இப்படத்தின் கதைக்கு முழுக்க தேவையானது.

நடிகை சுனைனா, “100” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த பிரவீண்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் புகழ் பெற்றுள்ள சித்து குமார் இப்படத்தில் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு உதய சங்கர் செய்ய, தீபக் எடிட்டிங் செய்கிறார்.

சாய் ஃபிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் விஸ்வநாதன், ப்ரவீன் தயாரிக்கும் இத்திரைப்படம் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக செப்டம்பர் 16ல் தொடங்கப்படுகிறது. ஒரே கட்டமாக தொடர்ந்து 40 நாட்கள் தலக்கோணம், கொடைக்கானல், சென்னைப் பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளது.

Leave a Response